நாடாளுமன்ற தேர்தல்..! ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா மனைவி போட்டி
நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அதில் ஒரு தொகுதியான வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி ராஜாவின் மனைவி ஆன்னி ராஜா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிட்டார்.
சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில் இந்த முறையும் வயநாடு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அங்கு போட்டியிட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதி செய்யும் விதமாக ’இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கேரளாவில் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
Read More – விவசாயிகள் போராட்டம்! ஹரியானாவின் 7 மாவட்டங்களில் மீண்டும் இணைய சேவை தொடக்கம்
4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி எம்.பியாக இருக்கும் வயநாடு தொகுதிக்கு வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி ராஜாவின் மனைவி ஆன்னி ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் தொகுதியில் பன்னியன் ரவீந்திரனும், திருச்சூர் தொகுதியில் வி.எஸ் சுனில்குமாரும், மாவேலிக்கரை தொகுதியில் அருண்குமாரும் போட்டியிடவுள்ளனர்.