குஜராத் – பாகிஸ்தான் இடையே கரையை கடக்கும் பிபோர்ஜாய் புயல்.!
பிபோர்ஜாய் புயல்:
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் “பிபோர்ஜாய்” வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று அதி தீவிர புயலாக வலுப்பெற்று, அதே பகுதியில் மும்பையில் இருந்து மேற்கே சுமார் 560 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 460 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வலுப்பெற்று, 14ம் தேதி காலை வரை வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில், 15ம் தேதி 1130-1430 மணி அளவில் மிக தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்) – மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) கடற்கரை பகுதிகளில் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அந்தநேரத்தில், காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை:
மேலும், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று சூறாவளிக்காற்று:
- இலட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
- வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 150 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 185 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
- சௌராஷ்டிரா-கட்ச் கடற்கரை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.