மிக்ஜாம் புயல்.! தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவை புரட்டி போட்ட கனமழை.!
சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) கரையை கடக்கும் போது ஆந்திர மாநிலத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திர பிரதேசத்தம் கடற்கரையில் கரையை கடக்கும் என கூறப்பட்டு இருந்தது. அதே போல கரையை கடக்கையில் பலத்த காற்றுடன் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.
சித்தூர், நெல்லூர், பிரகாசம், குண்டூர், பாபட்லா மற்றும் கிருஷ்ணா ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. மேலும் 90 முதல் 110 கிமீ வேகத்தில் காற்றும் வீசியது. புயல் காரணமாக மேற்கு கோதாவரி மற்றும் கோனாசீமா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கனமழை பேய்த்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.
இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை..! ரயில், விமானம், பேருந்து சேவைகள் மீண்டும் தொடக்கம்.!
கனமழை காரணமாக் கடலோரப் பகுதிகளில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடபட்டு இருந்த விளைநிலங்கள் கனமழையில் சேதமடைந்துள்ளன.
புயல் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புயல் கரையை கடந்து அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாபட்லாவில் மட்டும் 50 சிறப்புக் குழுக்களை மாநில அரசு அனுப்பியுள்ளது. பாபட்லா மாவட்டத்தில் 1,350 பேர் 27 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாபட்லா மாவட்ட ஆட்சியர் பி ரஞ்சித் பாஷா கூறுகையில், புயலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ள 111 கிராமங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. இதனிடையே, வேளாண் துறை அதிகாரிகள் நேரில் சென்று பயிர் சேதங்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரெபள்ளே, வெமுரு, பாபட்லா, நிஜாம்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர் என்று கூறினார்.
புயல் கரையை கடந்த வேளையில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள சூர்யலங்காவில் கடல் சீற்றமாக மாறியது, 2 மீட்டர் உயரத்தில் அலைகள் எழுந்தன. புயலின் தாக்கம் காரணமாக, பாபட்லா, ரேபள்ளே, நிஜாம்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் சில மீட்டர்கள் கடல் கொந்தளிப்பாக இருந்ததாக வானிலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.