ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி : ‘இரு நாட்களில் செலுத்தப்படும்’ புதுச்சேரி அரசு அறிவிப்பு!
ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்திற்கு நிவாரண நிதி அவரவர் வங்கி கணக்கில் இரு நாட்களில் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் ஒரு தாக்கம் காட்டிவிட்டு தான் சென்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக, இந்த புயல் புதுச்சேரிக்கு பக்கத்தில் கரையை கடந்த காரணத்தால் அங்கு கனமழை பெய்து வெள்ளம் ஏற்ப்பட்டது. பல பகுதிகளில் நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது என்று கூட சொல்லலாம்.
இதனையடுத்து, புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் ரூ.5,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என ஏற்கனவே புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், நிவாரணம் வழங்குவதற்காக எவ்வளவு கோடி வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான தகவலும் வெளிவந்திருக்கிறது.
அதன்படி, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 அவரவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும், இதற்காக ரூ. 177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக, இந்த பகுதிகளில் 3 லட்சத்து 54 ரேஷன் கார்டுகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.177 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான படிவத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே, இன்னும் இரண்டு நாட்களில் நிவாரண தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுடைய வங்கியில் வரவு வைக்கப்படும் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
மேலும், ஏற்கனவே, கனமழையால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ. 40,000, கன்றுக்குட்டிகளுக்கு 20,000, ஆட்டிற்கு ரூ. 20,000, சேதமடைந்த படகுக்கு 10,000, விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ. 30,000 நிவாரணம், சேதமடைந்த குடுசை வீடுகளுக்கு ரூ. 20,000 எனவும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.