மிக தீவிர புயலாக வலுவடைந்தது ‘பிபோர்ஜோய்’ புயல்…!
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபோர்ஜோய்’ மிக தீவிர புயலாக வலுவடைந்ததது. இது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 3 நாட்களில் வடக்கு நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால், கேரளா முதல் மகாராஷ்டிரா வரை உள்ள மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
5 நாட்களுக்கு கனமழை:
பிபோர்ஜாய் புயல் காரணமாக கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுவையில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.