வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.! இன்று மாலை 6 மணி முதல் செயல்படும் – யெஸ் வங்கி அறிவிப்பு.!
வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி மார்ச் 5-ஆம் தேதி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது. பின்னர் ஏப்ரல்-3ஆம் தேதி வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வைப்புத் தொகையில் ரூ.50,000 மேல் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் வங்கியின் கடன் வழங்கும் செயல்பாடும் முடக்கப்பட்டது. இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியது.
இதையடுத்து யெஸ் வங்கியின் பங்குகளை விற்பனை செய்து, நிதி திரட்டும் முயற்சியில் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஈடுபட்டன. அந்த வகையில் பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யெஸ் வங்கியில் ரூ.7,250 கோடியை முதலீடு செய்ய ஒப்புதல் பெற்றது. இதையடுத்து தனியார் துறை வங்கிகள் ஐசிஐசிஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் பேங்க் கோடாக் பேங்க் போன்ற வங்கிகள் யெஸ் வங்கியில் முதலீடு செய்ய முன்வந்தன.
Full banking services will resume from 18:00 hours IST on March 18, 2020#YESForYOU pic.twitter.com/q5GMmW4wr4
— YES BANK (@YESBANK) March 18, 2020
இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் யெஸ் வங்கி கட்டுப்பாடுகள் நீங்குவதாக சமீபத்தில் தெரிவித்தார். யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடு இன்று முதல் விலக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 6 மணி முதல் யெஸ் வங்கி முழு அளவில் செயல்படும் எனவும், ரத்து செய்யப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்றும் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.