வயநாடு நிலவரம் : முதல்வரின் ஆலோசனை முதல்., மீட்பு பணிகள் வரை.!
வயநாடு நிலச்சரிவு : நேற்று அதிகாலை கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, முண்டைக்கை, மேப்பாடி பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
நிலச்சரிவு துயரத்தின் பாதிப்பை உணர்ந்ததும், மாநில மீட்பு படையினருடன், மத்திய மீட்பு படையினர், இந்திய ராணுவத்தினர் நேற்று முதலே களத்தில் இறங்கு மீட்பு பணிகளை தீவிரப்படுத்திவிட்டனர். அதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் மீட்பு படையினர் வயநாடு விரைந்தனர்.
வயநாடு, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மீட்புப்பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருந்தும், மீட்பு படையினர் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்படும் மக்கள் அருகாமையில் உள்ள பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி தனித்தீவாக மாறியிருந்த முண்டைக்கை பகுதிற்கு, கடும் தடங்கல்களை மீறி, தற்காலிக பாலங்கள் அமைத்து இந்திய ராணுவத்தினர் இன்று சென்றடைந்துள்ளனர். தற்போது அங்குள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல தமிழகத்தில் இருந்து மீட்பு படையினர், மருத்துவ குழுவினர் , தீயணைப்பு குழுவினர் ஆகியோர் இன்று அதிகாலை 4 மணி அளவில் வயநாடு சென்றடைந்துள்ளனர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என்று கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் வயநாடு பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளை நேரில் காண்பதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று வயநாடு செல்ல இருக்கிறார். இன்று கேரள முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வயநாடு மீட்புப்பணிகள் நிலவரம் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.