டெல்லியில் நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் தொடக்கம்..!-எவைகளுக்கு அனுமதி..!
- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த ஊரடங்கு தளர்வுகள் நாளை முதல் அமலாகிறது.
டெல்லி கொரோனா இரண்டாம் அலையால் பெருமளவு பாதிப்புகளையும், இழப்புகளையும் சந்தித்தது. அதன் காரணத்தால் டெல்லி முதல்வர் அங்கு ஊரடங்கை அமல்படுத்தினார். தற்போது அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 200 ஐ அடைந்தது. அதன் காரணத்தால் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளார். இந்த தளர்வுகள் நாளை காலை 5 மணியிலிருந்து தொடக்கமாகும். இதில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்:
கடைகள், மால்கள் ஆகியவை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி. தனியார் நிறுவனங்கள் அனைத்தும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத பணியாட்களோடு இயங்கலாம். உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு அனுமதி. பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் பயணங்களில் 50% பயணிகள் இயங்க அனுமதி.
ஆட்டோ மற்றும் டாக்ஸிக்களில் ஓட்டுனரோடு சேர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி. பக்தர்கள் இல்லாமல் வழிபாட்டு தளங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி.
மேலும், இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பள்ளி, கல்வி நிலையங்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு அரங்குகள், திரையரங்குகள், உடற்பயிற்சி மையம், பூங்கா, அழகு நிலையங்கள் ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.