ஊரடங்கு நீட்டிப்பு: எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்..?
நாடு முழுவதும் நேற்றுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், மேலும் 19 நாட்களுக்கு நீடித்து மே 3 வரை ஊரடங்கு தொடரும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பின்னர் ஏப்ரல் 20 ம் தேதி பின்பு நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் என்றும் அதற்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று வெளியிடப்படும் என தெரிவித்தார். அதன்படி இன்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் மே 3 வரை தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மே 3 ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்கனவே இருந்த தடை தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்து சேவைக்கு தடை தொடரும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தொடர்ந்து தடை நீடிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மருந்து பொருட்கள், மருந்து உபகரணங்கள் கொண்டு செல்ல மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக விமான சேவைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.