ஊரடங்கு நீட்டிப்பு: இன்று முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி.. எங்கே தெரியுமா?
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மதுபானக் கூடங்கள், கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும் தனியார் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்குவதற்கும் அனுமதி வழக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சிகளில் 100 பேரும், இறப்பு மற்றும் இறுதி சங்கு போன்ற துக்க நிகழ்ச்சிகளில் 20 பேரும் கலந்துகொள்ளலாம். இதுபோன்று கடற்கரை சாலை, பூங்காக்கள், தோட்டங்கள் 50 சதவீத பேருடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஆகஸ்ட் 1 முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என்றும் இரவு 9 மணிக்குப் பின் காட்சிகள் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் அதிகபட்சம் 100 பேர் மட்டும் பங்கேற்கலாம். குறிப்பாக முகக்கவசம், தனி மனித இடைவெளி ஆகிய கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடனும், புதிய தளர்வுகள் இன்றி வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, புதுச்சேரியிலும் நேற்றுடன் ஊரடங்கு முடியும் நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.