மே 31 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு – மத்திய உள்துறை அமைச்சகம்!
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு மே 31 வரை செயல்படுத்த வேண்டிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள நிலையில், இவை அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவறுத்தியுள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவதுடன், ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் வருகின்ற மே 31 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தொற்று அதிகம் கொண்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய சுகாதார அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இந்த மாதம் முழுவதும் கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் முறையாக இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த ஒரு வாரத்தில் 10% அல்லது அதற்கும் மேல் தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்கள் அடையாளம் காண வேண்டும் எனவும், 60 சதவீதத்திற்கும் அதிகமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகரித்துள்ள மாவட்டங்களை அடையாளம் காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரு அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் மட்டும் உள்ளூர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக எடுப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.