கோவாவில் ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோவாவில் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கோவாவிலும் இதுவரை 1.52 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தொடர்ந்து அங்கு பாதிப்புகள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
எனவே, கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே கோவாவில் கடந்த மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில், வருகிற 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடு முடிய உள்ளதால் இது குறித்து அம்மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் அவர்கள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜூன் 7-ஆம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பான உத்தரவுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர் ஆட்சியர்கள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே கோவாவில் ஊரடங்கு அமலில் உள்ள போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கிலும் அதே தளர்வுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய கடைகள் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறந்து இருக்கும் எனவும், ஹோட்டலில் காலை 7 முதல் இரவு 7 வரை பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.