அதிகாலை 3 மணி முதல்.. விமான போக்குக்குவரத்துறை முக்கிய அறிவிப்பு.!
டெல்லி: மைக்ரோசாப்ட் இயங்குதள பிரச்சனை சரிசெய்யப்பட்டு இன்று அதிகாலை முதல் இந்திய விமான சேவை வழக்கம் போல இயங்குகிறது என மத்திய விமான போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
நேற்று மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) பிரச்சனை காரணமாக உலகம் முழுக்க கணினியை மையமாக கொண்டு இயங்கும் பல்வேறு துறைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக உலகளவில் பல்வேறு இடங்களில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் போர்டிங் பாஸ், செக் இன் ஆகியவை விமான நிலைய ஊழியர்கள் கையால் எழுதிக்கொடுக்கும் சூழல் உருவானது. இதனால் பல்வேறு இடங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த கிரவுட்ஸ்ட்ரைக் பிரச்னையை தீர்க்க மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த தொழில்நுட்ப பிரச்சனைகள் ஓரளவு சரிசெய்யப்பட்டு இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் நிலைமை சரிசெய்யப்பட்டு விமான சேவைகள் வழக்கம் போல இயங்க தொடங்கப்பட்டன . இப்படியான சூழலில் இந்திய விமானத்துறை அமைச்சகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இன்று அதிகாலை 3 மணி முதல் விமான சேவை வழக்கம் போல இயங்க ஆரம்பித்துவிட்டன. இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் முழுவதும் விமான அமைப்புகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கிவிட்டன. தற்போது விமானப் போக்குவரத்து சீராக நடந்து வருகிறது.
நேற்றைய இடையூறுகள் காரணமாக ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அது படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. இன்று மதியம், அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.