கேட்வே ஆஃப் இந்தியாவின் மேற்பரப்பில் விரிசல்..! மத்திய அமைச்சர் தகவல்..!
மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவின் மேற்பரப்பில் விரிசல்கள் உள்ளதாக அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியாவின் (Gateway of India) மேற்பரப்பில் சமீபத்திய ஆய்வின் போது சில விரிசல்கள் காணப்பட்டன என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில், கேட்வே ஆஃப் இந்தியாவின் சமீபத்திய கட்டமைப்பு தணிக்கையில் முகப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதா.? என்று அமைச்சரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா மகாராஷ்டிரா அரசின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறையின் பாதுகாப்பின் கீழ் உள்ளது. சமீபத்திய ஆய்வில் கேட்வே ஆஃப் இந்தியாவின் மேற்பரப்பில் சில விரிசல்கள் காணப்பட்டதாகவும், ஒட்டுமொத்த கட்டமைப்பும் நல்ல நிலையில் பாதுகாபாக இருக்கிறது எனவும் கூறினார்.
மேலும், தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறை விரிவான தள மேலாண்மைத் திட்டத்தையும், கேட்வே ஆஃப் இந்தியாவைப் பாதுகாத்தல் மற்றும் பழுதுபார்ப்பதற்கான மதிப்பீட்டை ரூ. 8.9 கோடி மதிப்பில் தயார் செய்துள்ளது என்றும் இதற்கு மகாராஷ்டிரா மார்ச் 10ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது என்றும் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மக்களவையில் தெரிவித்தார்.
முன்னதாக, டிசம்பர் 1911 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வருகையை நினைவுகூரும் வகையில் கேட்வே ஆஃப் இந்தியா கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் கட்டுமானம் 1924 இல் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.