சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
நுரையீரல் பிரச்னை காரணமாக, சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று உயிரிழந்தார்.
டெல்லி : கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து அவருடைய உடல் நிலை பற்றி மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சுவாசக் குழாய் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அவரது உடல்நிலையை பலதரப்பட்ட மருத்துவர்கள் குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்கள்” என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (செப்12) -ஆம் தேதி சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார். இவருடைய மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.