கோவின்:இனி ஒரு மொபைல் எண்ணைக் கொண்டு 6 பேர் பதிவு செய்யலாம் – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
டெல்லி:இனி ஒரு மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஆறு பேர் வரை CoWIN இணையதளத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி மிகத் தீவிரமாக மத்திய,மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதேசமயம்,கோவின்(CoWIN) இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுவாக,கோவின் இணையதளத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களின் பெயர்,தொலைபேசி எண் ஆகியவை பதிவு செய்யப்படும்.பின்னர், தடுப்பூசி செலுத்தியதையடுத்து,சம்பந்தப்பட்ட நபருக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்,அவரது மொபைல் எண்ணிற்கு ஒரு மெசேஜ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.அதை வைத்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக,கோவின் இணையதளத்தில் இதுவரை ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்தி 4 பேர் வரை மேடுமே முன்பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில்,தற்போது மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி, இனி கோவின் இணையதளத்தில் ஒரே மொபைல் எண்ணைப் பயன்படுத்தி 6 பேர் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சில இடங்களில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ் வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதனை சரிசெய்யும் வகையில், கோவின் இணையதளத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இதன் மூலம்,தடுப்பூசியின் நிலையை பயனாளிகளால் சரிசெய்ய முடியும்,அதாவது பயனர்கள் தங்கள் சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருந்தால் திருத்திக்கொள்ளும் வகையில் ‘ரைஸ் அன் இஷ்யூ’ என்ற அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிக்கல் பயன்பாடு மூலம் ஆன்லைன் கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு,3 முதல் 7 நாட்களுக்குள் அவர்களது விவரங்கள் சரிசெய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிழைகள் இருந்தால்,பயனர்கள் தங்கள் பெயர், பிறந்த ஆண்டு மற்றும் பாலினம்ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்ய உள்நுழையலாம்.அதன்படி,
பிழைகளை எவ்வாறு சரிசெய்வது?:
- https://www.cowin.gov.in/ க்குச் செல்லவும்,
- உங்கள் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிட்டு உள்நுழையவும்,
- உங்கள் மொபைலில் பெறப்பட்ட 6 இலக்க OTP ஐ உள்ளிடவும்,
- சரிபார்த்து தொடரவும் (Verify & Proceed) என்பதைக் கிளிக் செய்யவும்,
- கணக்கு விவரங்களுக்குச்(Account Details) செல்லவும்,
- நீங்கள் தடுப்பூசி போடப்பட்டிருந்தால், “Raise an Issue” பொத்தானைக் காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்,
- போர்டல் உங்களிடம் “என்ன பிரச்சனை?” என்று கேட்கும். “சான்றிதழில் திருத்தம் (Correction in certificate)” என்பதன் கீழ், நீங்கள் சரிசெய்ய வேண்டிய பிழையைக் கிளிக் செய்யவும்
அதன் பிறகு, ஒரு பயனர் தங்கள் தகவலை புதுப்பிக்க முடியும்.விவரங்களை சரிபார்த்த பிறகு அவர்கள் பிழை இல்லாத சான்றிதழைப் பெற முடியும்.