ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்த கொரோனா தொற்றுள்ள கர்ப்பினி பெண்கள்…அகர்தலாவில் மகிழ்ச்சி !
அகர்தலாவில் கொரோனா தொற்றுள்ள 225 கர்ப்பினி பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்த மகிழ்ச்சி சம்பவம்….
இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் பாதிப்பானது நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அதில் உயிரிழப்புகள், பொருளாதார சரிவு, மக்களின் வேலையில்லா திண்டாட்டம் போன்றவைகளும் அடங்கும். இந்த சூழலில் அகர்தலாவில் கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரியில் (ஏஜிஎம்சி) கொரோனா வைரஸின் இரண்டு அலைகளின் போது குறைந்தது 225 கொரோனா தொற்றுள்ள கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பிரசவித்திருக்கிறார்கள். மேலும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பிரசவத்திற்கு பிந்தைய வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா முதல் அலையின் போது 198 கொரோனா தொற்றுள்ள பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர், அவர்களில் 60 பேருக்கு சிசேரியன் என்றும், 2 வது அலையின் போது இந்த எண்ணிக்கை 27 ஆக இருந்தது எனவும் ஏ.ஜி.எம்.சியின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் துறையின் தலைவர் டாக்டர் ஜெயந்தா ரே கூறியுள்ளார்.
மேலும் அவர் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களால் எடுக்கப்பட்ட மிகுந்த கவனிப்பு காரணமாகவே 225 கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பிரசவித்தனர் என்று கூறியுள்ளார். இருப்பினும் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு புன்னகையை கொண்டு வருவது மருத்துவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏஜிஎம்சி மருத்துவமனையில் இதுபோன்ற வழக்குகளை கையாளும் சில மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர், இருப்பினும் குழந்தைகளுக்கு அந்த தொற்றினால் பாதிப்பு இல்லாதவாறு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டதாக ஜெயந்தா ரே கூறியுள்ளார்.