மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
மதுபான கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நீட்டிப்பு.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிப். 26ஆம் தேதி டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்த பிறகு, மார்ச் 9ஆம் தேதி அதே வழக்கில் அமலாக்கத்துறையும் அவரைக் கைது செய்தது. மணீஷ் சிசோடியா தேசிய தலைநகர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ விசாரித்து வரும் அதே வழக்கில், சிசோடியாவின் ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
அமலாக்கத்துறை வழக்கின் கடைசி விசாரணையின்போது, அதாவது சிசோடியா காவலில் இருந்தபோது முக்கிய விவரங்கள் வந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களிடம் அவர் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சிசோடியாவின் மின்னஞ்சல் மற்றும் மொபைல் போன்றவற்றில் இருந்து ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.