கடன் செயலியின் முகவர்களின் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி!!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரியைச் சேர்ந்த தம்பதியினர் நேற்று கடன் செயலியின் முகவர்களின் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டனர். துர்காராவ் மற்றும் ரம்யா லட்சுமி தம்பதியினர் வெவ்வேறு கடன் செயலிகளில் கடன் பெற்றதாகவும், அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாததால், லோன் ஏஜென்ட்கள் தங்கள் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதாகக் கூறி அவர்களை மிரட்டத் தொடங்கினர் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, ஆன்லைன் பணக் கடன் வழங்கும் செயலிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குமாறு கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் மாதவி லதாவுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.