கள்ளச்சாராயம் விவகாரம்: இழப்பீடு வழங்க முடியாது..! பீகார் முதலமைச்சர் ஆவேசம்!
அரசு எச்சரித்தும் குடித்து உயிரிழந்தால் எப்படி இழப்பீடு தர முடியும் என பீகார் முதலமைச்சர் சட்டப்பேரவையில் ஆவேசம்.
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில அரசு மீது போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்த நிலையில், பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50 பேர் உயிரிழந்தது குறித்த சட்டப்பேரவை விவாதத்தில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆவேசமாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு எந்த இழப்பீடும் கொடுக்க முடியாது.
குடித்தால் உயிரிழப்பீர்கள் என தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். அப்படியும் குடித்து உயிரிழந்தால் எப்படி இழப்பீடு வழங்க முடியும்? என கேள்வி எழுப்பினார். இத்தனை பேர் இறந்தது படுகொலை, பீகார் அரசே இதற்கு பொறுப்பு என பாஜக கூறியதற்கு, குஜராத்தில் மோர்பி தொங்கும் பாலம் அவ்வளவு பேர் இறந்தும், அந்த செய்தி ஒருநாள் தான் செய்தித்தாள்களில் இருந்தது எனவும் நிதிஷ் குமார் பதிலளித்தார்.