மகாராஷ்டிராவில் ஊழல் மலிந்து கிடக்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!
மகாராஷ்டிராவில் ஊழல் மலிந்து காணப்படுவதாக அம்மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே அவர்கள் முதல்வராக மாநிலத்தை ஆட்சி செய்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இதற்காக எத்தனை நாள் கூட்டத்தை நடத்துவது மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்வது போன்ற சில அம்சங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று அம்மாநிலத்தில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மகாராஷ்டிர மாநிலத்தில் ஊழல் மலிந்து காணப்படுவதாகவும், ஆனால் அரசு அதை மூடி மறைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தங்களுடைய எந்த கேள்விக்கும் பதில் அளிக்க அரசு விரும்பவில்லை எனவும், கொரோனாவை காரணம் காட்டி பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்களை குறைக்க அரசு முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனால்தான் தான் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாகவும் காரணம் தெரிவித்துள்ளார்.