கொரோனா தடுப்பு உபகரணம் இல்லை என்ற மருத்துவர் அரை நிர்வாணமாக சாலையில் கிடந்ததால் பரபரப்பு…
ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேவையான உபகரணங்கள், தான் வேலை செய்யும் மருத்துவமனையில் இல்லை என்று குற்றம் சாட்டிய அரசு மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் சாலையில் கிடந்ததால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் சுதாகர் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் தான் பணியாற்றும் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை என்று குற்றம் சாட்டினார்.
இதற்காக அவரை ஆந்திர மாநில சுகாதாரத்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின், அவர் எங்கு சென்றார், என்ன ஆனார்? எங்கு இருக்கிறார்? என்று தெரியாத நிலையில், தற்போது டாக்டர் சுதாகர் நேற்று மாலை நரசிபட்டினம் அருகே சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் ஒரு லாரி ஒன்றின் முன் பரிதாபமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரை மீட்டு நரசிபட்டினம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.