மத்திய பிரதேச எல்லையை மூடிய உத்திர பிரதேசம்… சொந்த ஊருக்கு செல்ல முயன்றோர் எதிர்ப்பு தெரிவித்து காவலர்கள் மீது கல்வீச்சு…
உயிர்கொல்லி நோயான கொடிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளி மாநிலங்களில் தவிக்கும் புலம்பெயர்ந்த கூலி தொழிலாளர்கள் தாங்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசு சமீபத்தில் சிறப்பு அனுமதி அளித்தது. இந்நிலையில், தற்போது மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அரசு பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தங்கள் மாநில தொழிலாளர்களை மீண்டும் தங்கள் மாநிலத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்தது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தினுடனான எல்லையை உத்தர பிரதேச அரசு மூடியது. இதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பர்வானி மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. இந்நிலையில், பீகார், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் அனைவரும் இணைந்து பர்வானி எல்லையில் காவலர்கள் அனுமதி மறுத்ததை கண்டித்து நேற்று அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவலர்கள் மீது நடத்திய கல்வீச்சில் 3 காவலர்கள் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.