கொரோனா தடுப்பு நிதியுதவி…. உண்டியல் சேமிப்பை வாரி வழங்கும் பால் மணம் மாறா பாலர்கள்…
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய மக்கள் நிதியுதவி அளிக்கலாம் என இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று பலரும் நிதியுதவி அளிக்க முன் வந்து நிதியுதவி அளித்தனர். இந்த உன்னத பணியில் தங்கள் பங்கும் வேண்டும் என்று கருதிய சின்னஞ்சிறு சிறுவர் சிறுமியர், தங்கள் சிறுசேமிப்பு பணத்தை பிரதமரின் கொரோனா தடுப்பு நிதியுதவிக்கு அனுப்ப துவங்கியுள்ளனர். இதில்,
- குஜராத் மாநிலம், பரூச் மாவட்டத்தை சேர்ந்த அங்லேஷ்வர் நகரை சேர்ந்த சிறுமி, பாரிஸ் வியாஸ் (4), தனது உண்டியலில் சேர்த்து வைத்திருந்த, 11,200 ரூபாயை, கொரோனா தடுப்புக்கான, பிரதமர் நிவாரண நிதிக்கு, வழங்கியுள்ளார்.
- இதேபோல், ஆமதாபாதை சேர்ந்த, மூன்று சிறுவர்கள், காவல் நிலையத்துக்கு சென்று, தாங்கள் சேர்த்து வைத்திருந்த, 5,500 ரூபாயை வழங்கினர்.
- ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாற்று திறனாளியான ஹிரிதயேஷ்வர் சிங் பட்டி (17) கடந்த ஆண்டு, ‘பிரதம மந்திரி ராஷ்ட்ரீய பால் சக்தி’ விருது பெற்றார். இந்த விருதுடன் ஊக்க தொகையாக 2 லட்சம் ரூபாய் அளித்தனர்.இந்நிலையில் தற்போது இந்த விருது மற்றும் ஊக்கத்தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்க, ஹரிதயேஷ்வர் சிங் முடிவு செய்துள்ளார்.
- இதேபோல், உத்திர பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்த, 10, 6 வயது குழந்தைகள் தலா, 5,000 ரூபாய் உண்டியல் பணத்தை வழங்கியுள்ளனர். இந்த சிறுவர்களது நாட்டு பற்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாக உள்ளது.