கொரோனா விவகாரம்… அறிகுறிகளுடன் கண்காணிப்பில் இருந்த கைதி தப்பி ஓட்டம்… காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை….
உலக நாடுகளை கடுமையாக நிலைகுலைய வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் தனது தாக்கத்தை இந்தியாவிலும் விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 2069 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. எனவே இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொரோனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. இதன் படி கொரோனா தொற்றுக்கான அறிகுறி யாருக்காவது இருந்தால் அவர்களை 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் சிறைச் சாலையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த அஜய் பாபு என்ற கைதிக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருந்ததற்கான சந்தேகத்தின் பேரில் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த கைதி தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட அறையின் ஜன்னலை உடைத்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்து கேரள காவல்துறையினர் உத்திர பிரதேசத்தை சேர்ந்த கைதி அஜய்பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.