உத்தரப் பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா.!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா உறுதியான 172 பேரில் 42 பேர் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே உத்தர பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் தப்லிகி ஜமாத் என்ற மத அமைப்பு சார்பில் முஸ்லிம் மத குருக்கள் பங்கேற்ற மாநாடு கடந்த மாதம் 8 முதல் 20 வரை நடைபெற்றது. இதில் இந்தியா மட்டுமில்லாமல் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகம், ஆந்திரா, காஷ்மீர், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளனர்.
பின்னர் மாநாட்டில் பங்கேற்று ஊர் திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து கொரோனா சுயபரிசோதனை செய்யவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து மாநாட்டில் பங்கேற்று ஊர் திரும்பியவர்களில் தமிழகத்தில் 264 பேருக்கும், ஆந்திராவில் 40க்கும் மேற்பட்டோர் மற்றும் தற்போது உத்ரபிரேதேசத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.