கொரோனாவின் இரண்டாம் அலை இளைஞர்களை அதிகம் தாக்குவதற்கு காரணம் இது தான் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்!
இளைஞர்கள் அலட்சியமாக வெளியில் சுற்றுவதால், கொரோனாவின் இரண்டாம் அலை தற்பொழுது அவர்களை தான் அதிகம் தாக்குவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் பால்ராம் பார்கவா அவர்கள் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோன வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மக்கள் வெளியில் செல்லும் பொழுது முகக்கவசம் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஒவ்வொரு மாநில அரசுகளும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் இளைஞர்கள் பலர் அலட்சியமாக அடிக்கடி வெளியில் செல்வதும் பாதுகாப்பு இன்றி நடந்து கொள்வதுமாக இருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனர் பால்ராம் பார்கவா அவர்கள் பேசுகையில், இளைஞர்கள் தற்போது அதிகம் வெளியே செல்ல தொடங்கியுள்ளதால் கொரோனாவின் இரண்டாம் அலைக்கு இளைஞர்கள் தான் தற்பொழுது அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், தற்பொழுது புதிய வகை கொரோனா வைரஸ் உருவெடுத்து வரும் நிலையில் இது இளைஞர்களை மட்டுமல்லாமல் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் அதிகம் பரவி வருவதாக தெரிவித்துள்ளார்.