எலுமிச்சை சாற்றை மூக்கில் ஊற்றினால் கொரோனா வராது – வதந்தியை நம்பியவர் உயிரிழப்பு!
எலுமிச்சை சாற்றை மூக்கில் ஊற்றினால் கொரோனா வராது என்ற வதந்தியை நம்பி ஊற்றிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பசவராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் ஆக்சிஜன் இல்லாமலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்து வருகின்றனர். எனவே கொரோனா வராமல் தடுப்பதே வழி என மக்கள் தற்பொழுதும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பல இயற்கை வைத்தியங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்திகளைப் பரப்பி விடுவதால் பலர் அதை உண்மை என்று நம்பி விடுகின்றனர். இதுபோல மூக்கில் எலுமிச்சை சாற்றை விட்டால் கொரோனா வராது எனவும் அது ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் எனவும் கர்நாடக முன்னாள் எம்பி விஜய் சங்கேஸ்வரர் அவர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். இதனை நம்பி 45 வயதுடைய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் பசவராஜ் என்பவர் தனது மூக்கில் எலுமிச்சை சாற்றை விட்டு உள்ளார். அதன் பின் பசவராஜ் தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்த நிலையில் இறுதியில் உயிரிழந்துள்ளார். இதுபோன்ற வதந்திகளை நம்பி சமூக வலைதளங்களில் பரவக்கூடிய போலியான கருத்துக்களை நம்பி மக்கள் எதையும் வீட்டில் செய்து பார்க்க வேண்டாம் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.