ரூபாய் நோட்டு மூலம் கொரோனா வைரஸ் பரவும் – மத்திய ரிசர்வ் வங்கி
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பு குறைந்தபாடில்லை. மேலும், இந்த வைரஸை அழிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியிலும் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சகத்துக்கு அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைமைப்பான சிஏஐடி (CAIT) ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவ சாத்தியம் உள்ளதா என ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியிருந்தது.
இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகள் பாக்டீரியாக்கள், கொரோனா உள்ளிட்ட வைரஸ்களை தாங்கிச் செல்லக்கூடியவை என்றும், எனவே ரூபாய் நோட்டுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும், மத்திய அரசு, ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவலை தடுக்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ஊக்கத் தொகைகளை அறிவிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.