இந்தியாவில் கொரோனா வைரஸ் எட்டிப்பார்க்காத கிராமமா ?…இது தான் காரணம்
இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வாட்டி வதைக்கும் இந்த தொற்று கிருமி, இந்தியாவிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவின் ஒரு கிராமத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை என்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் கோசகுமுடா பகுதியில் உள்ள பலேங்கா கிராமத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. இந்த கிராமம் சத்தீஸ்கர் பகுதிக்கு அருகில் உள்ளது.
இங்கு கொரோனா பாதிக்காததற்கு கிராம மக்கள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளும் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் 1,623 பேர் வசித்து வருகின்றனர். இங்கு இருக்கும் மக்களில் பெரும்பான்மையோருக்கு கல்வி அறிவு இல்லை. ஆனால் கொரோனா தொற்று நோயிலிருந்து தப்பிக்க பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளனர் கிராம மக்கள்.
அந்த கிராமத்தின் அனைத்து எல்லை பகுதிகளையும் மூடிவிட்டனர். வெளியே செல்பவர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வருகின்றனர். மேலும், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தியும் வருகின்றனர். அந்த கிராமத்திற்கு தேவையான எல்லா வசதிகளையும் அரசே மேற்கொண்டு வருகிறது. இந்த விழிப்புணர்வே அங்கு இதுவரை கொரோனா நுழையாததற்கு காரணம் என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.