‘AB’ மற்றும் ‘A’ இரத்தவகை உள்ளவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்…! ஆய்வில் வெளியான தகவல்…!
‘AB’ மற்றும் ‘A’ இரத்தவகை உள்ளவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளது. இதில் ‘ஏபி’ மற்றும் ‘ஏ’ இரத்த குழுக்கள் உள்ளவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஓ’ இரத்த குழுவை சேர்ந்தவர்கள், வைரசால் மிக குறைவாகதான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் அறிகுறி இல்லாமல் இருந்ததாகவும், மிகவும் லேசான அறிகுறிகளைக் கொண்டு இருப்பதாகவும் ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆராய்ச்சி அறிக்கையில், இறைச்சி உட்கொள்பவர்கள் சைவ உணவு உண்பவர்களை விட அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சைவ உணவில் அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, டாக்டர் அசோக் சர்மா கூறுகையில் எல்லாம் ஒரு நபரின் மரபணு கட்டமைப்பு பொருத்தது. ஒரு உதாரணம் கூறிய அவர், தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மலேரியாவால் அரிதாகவே பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் முழு குடும்பமும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. ஆனால் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் பாதிக்கப்படாமல் இருந்த சம்பவமும் உள்ளது. இது எல்லாம் மரபணு கட்டமைப்பு தான் என்று கூறியுள்ளார்.
‘ஏபி’ மற்றும் ‘ஏ’ இரத்த குழுக்கள் ஒப்பிடும்போது ‘ஓ’ இரத்த வகையை சேர்ந்தவர்கள், இந்த வைரசுக்கு எதிராக சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கின்றனர். அதற்க்காக அனைத்து நோய்தடுப்பு நெறிமுறைகளையும் விட்டு விடலாம் என்று அர்த்தம் இல்லை. என தெரிவித்துள்ளார்.
மேலும், சி.எஸ்.ஐ.ஆரின் இந்த கணக்கெடுப்பு குறித்து மூத்த மருத்துவர் டாக்டர் எஸ் கே கல்ரா கூறுகையில், இது வெறுமனே ஒரு மாதிரி கணக்கெடுப்பு மட்டுமே என தெரிவித்து உள்ளார்.