மனிதர்கள் மீது கொரோனா தடுப்பூசி பரிசோதனை – பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை!
தேர்ந்தெடுக்கப்பட்ட 18 மனிதர்கள் மீதான கொரானா தடுப்பூசி பரிசோதனையை ஜூலை 13 முதல் 18 வரை நடைமுறைப்படுத்தவுள்ளது பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் கடந்த சில மாதங்களாகவே குறையாத நிலையில், தற்பொழுது இதற்கான தீர்வாக பல மருத்துவமனை ஆய்வுக்கூடங்களில் மருந்துகள் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையும் நடைபெற்று கொண்டுள்ளது. இந்நிலையில் பாட்னாவிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது.
இதனை வைத்து விலங்குகளிடம் சோதனை நடைபெற்று வெற்றி அடைந்ததை அடுத்து தற்பொழுது 18 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனை தன்னார்வலர்களை வைத்து வருகின்ற ஜூலை 13 முதல் 18 வரை சோதனை நடைபெறவுள்ளது. இச்சோதனையில் 18 முதல் 55 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
தடுப்பூசியின் முதல் டோஸுக்குப் பிறகு, நோயாளி 2 முதல் 3 மணி நேரம் மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பார், பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். சோதனையை முடிக்க நோயாளிகளுக்கு மொத்தம் மூன்று ஊசி செலுத்தப்படும். கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையை நடத்த ஐ.சி.எம்.ஆர் தேர்ந்தெடுத்த 12 நிறுவனங்களில் எய்ம்ஸ் பாட்னாவும் ஒன்றாகும்.