விரைவில் 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – எய்ம்ஸ் இயக்குனர்!
விரைவில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக்கான கோவாக்சின் தடுப்பூசி செயல்பாட்டிற்கு வரும் என எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்பொழுது கொரோனா மூன்றாம் அலை விரைவில் வர உள்ளதாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அரசு சார்பிலும் இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆய்வுகளும் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான பரிசோதனை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் கூறுகையில் இரண்டு முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்த இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த கடந்த மே 16-ம் தேதியை இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்ததாக கூறியுள்ளார்.
மேலும் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் சேர்ந்து பிற நிறுவனங்களும் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.