இந்தியாவில் விரைவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர்!
இந்தியாவில் விரைவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே கொரோனா மூன்றாம் அலையில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி கொண்டு வரவேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக கூறியுள்ள மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவர் அவர்கள், கொரோனாவுக்கு எதிராக நாட்டில் 50 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளதாகவும், இது பெருமைக்குரியது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.
மேலும், தொடக்கத்தில் தினமும் 2.5 லட்சம் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது தினசரி 40 லட்சம் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு தடுப்பூசி உற்பத்தி அதிகரித்துள்ளதால் மூலம் தடுப்பூசி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை கட்டத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதன் செயல்திறன், நோய் எதிர்ப்பு பொருள் உருவாக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் .மேலும் விரைவில் சிறுவர்களுக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது எனவும் அமைச்சர் பாரதி பிரவீன் பவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.