கொரோனாவால் “அன்னையர் தினத்தில்” பெற்றோரை பிரிந்த 6 மாத குழந்தை;பராமரிக்கும் டெல்லி காவல்துறை..!
டெல்லியில் தாய்,தந்தை இருவருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் 6 மாத குழந்தையை டெல்லி காவல்துறை மீட்டு பராமரித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,பல மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.அதைப்போன்று,டெல்லியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,டெல்லியின் மீரட்டில் உள்ள ஜி.டி.பி. நகரில் வசிக்கும் கணவன்,மனைவி ஆகிய இருவருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,அவர்களின் 6 மாத குழந்தை அன்னையர் தினமன்று பெற்றோரை பிரிந்து பார்த்துக்கொள்ள யாருமின்றி ஆதரவற்று இருந்தது.இதுகுறித்து,அருகில் இருந்த பக்கத்துக்கு வீட்டினர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து,டெல்லி காவல்துறையினர் விரைந்து வந்து அந்த 6 மாத குழந்தையை மீட்டு பராமரித்து வந்த நிலையில்,தற்போது உத்திரப்பிரதேசத்தில் உள்ள தாய்வழி பாட்டியிடம் குழந்தையை பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.இந்த சம்பவம் டெல்லி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.