கொரோனா அச்சுறுத்தலால் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு !
சீனாவைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இந்தியாவில் இதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் மாதம் 2-ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 17 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கும் கால்பந்து தொடர் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதன் அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டிருந்தது. இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், வைரஸ் காரணமாக போட்டியை திட்டமிட்டபடி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாகக் குழுக்களில் இருந்து போட்டி ஒத்திவைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், போட்டி ஒத்தி வைத்து இருப்பதாக பிபா அறிவித்துள்ளது. புதிய அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவுகளை எதிர்கொள்வதற்காக சமீபத்தில் பிபா கவுன்சிலால் நிறுவப்பட்ட பிபா-கூட்டமைப்பு செயற்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உலக கோப்பை போட்டியை ஒத்திவைக்கும்படி முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.