மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளா? – அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.இதனைத் தொடர்ந்து,கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் சற்று சரிந்து காணப்பட்டதால் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன.இந்த நிலையில்,கொரோனா தொற்று வழக்குகள் தற்போது மீண்டும் அதிகரித்து ஒரு நாளில் 2,527 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட சனிக்கிழமை தரவுகளின்படி,இந்தியாவின் மொத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 4,30,54,952 ஆக உயர்ந்துள்ளது,அதே நேரத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 15,079 ஆக அதிகரித்துள்ளன.
இதனிடையே,தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.மாறாக,விதியை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.அதைப்போல பல மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு பின்பற்ற வேண்டிய கட்டுபாடுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27 ஆம் தேதி (புதன்கிழமை) அனைத்து மாநில முதல்வர்களை சந்தித்து ஆலோசனை உள்ளார்.காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
குறிப்பாக,நாட்டில் மீண்டும் நிலவும் கொரோனா பரவல் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் விளக்கம் அளிக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து,நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.