கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா.! மீண்டும் கல்லூரிகள் மூட வாய்ப்பு-சுகாதார அமைச்சர்.!
கர்நாடகாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக நவம்பர் 17 முதல் திறக்கப்பட்ட கல்லூரிகள் மீண்டும் மூடப்படலாம் என்று சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது .அந்த வகையில் சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பட்டப்படிப்பு, பொறியியல்,டிப்ளமோ கல்லூரிகள் நவம்பர் 17-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது . கல்லூரிகள் திறந்த 6 நாட்களில் குறைந்தது 130 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் கல்லூரிகளை மூட நேரிடும் என்றும்,வேறு வழி இல்லை என்றும் கர்நாடகா சுகாதார அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் ஞாயிறன்று தெரிவித்துள்ளார்.மேலும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கருத்து கேட்பு நடத்தப்பட்டுள்ளதாகவும்,அதை பொறுத்து பள்ளிகள் திறப்பு குறித்த முடிவு இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் கூறினார்.