ஒடிசா குனுப்பூர் சிறைச்சாலையில் உள்ள 70 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!
- ஒடிசா மாநிலத்தில் உள்ள குனுப்பூர் கிளை சிறைச்சாலையில் 113 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
- இங்கு உள்ள 70 கைதிகளுக்கு தற்பொழுது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பல இடங்களில் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பல சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் கொரோனா பரவல் காரணமாக ஜாமீன் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். சில சிறைச்சாலைகளில் கைதிகள் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் உடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் ரயஹடா மாவட்டத்தில் உள்ள குனுப்பூர் கிளை சிறைச்சாலையில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 113 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் உள்ள கைதிகளுக்கு கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து கைதிகள் மற்றும் சிறைத்துறை ஊழியர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற் கொண்டுள்ளனர்.
அதில் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்ட 113 கைதிகளில் 70 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சிறைத் துறை ஊழியர்கள் ஐந்து பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சிறை கைதிகள் மற்றும் சிறைத் துறை ஊழியர்கள் தற்பொழுது தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். மீதமுள்ள சிறைக்கைதிகள் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.