பிரிட்டன் ரிட்டன்: கேரளாவில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. புதிய வகை கொரோனாவா?
பிரிட்டனில் இருந்து கேரளா வந்தடைந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது புதிய வகையான கொரோனா வைரஸா? என கண்டறிய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து இறுதிக்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது.
இதனால் இந்தியா உட்பட 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆயினும் இந்த புதிய கொரோனா வைரஸ் பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளில் பரவி வருகிறது. இந்தநிலையில், பிரிட்டனில் இருந்து கேரளா வந்தடைந்த 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது பிரிட்டனில் பரவிவரும் புதிய வகையான கொரோனா வைரஸ் என்பதை கண்டறிய புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.