கேரளாவில் சில பகுதிகளில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது.! பினராயி விஜயன்.!
கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில் கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது இங்கு கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கேரளாவில் இன்று ஒருநாளில் மட்டும் 791 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கேரளாவில் அதிகமாக பாதிக்கப்பட்டது இன்று தான்.
இந்நிலையில், கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தின் பூந்துரா மற்றும் புல்லுவிலா ஆகியபகுதிகளில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,066 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா நோய் காரணமாக 39 பேர் உயிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,994 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.