கேரள கலெக்டரிடம் பேட்டி கண்ட பிரபல தொலைக்காட்சி நிருபரை தாக்கிய கொரோனா!
கேரள கலெக்டரிடம் பேட்டி கண்ட பிரபல தொலைக்காட்சி நிருபருக்கு கொரோனா தொற்று.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில் உலக அளவில், இதுவரை 3,220,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 228,224 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கேரளாவில் காசர்கோடு மாவட்ட ஆட்சியராக இருப்பவர் சஜித் பாபு. கடந்த 19ந் தேதி இவரிடம் பிரபல தொலைக்காட்சி சேனலை சேர்ந்த நிருபர் ஒருவர் பேட்டி எடுத்துள்ளார்.
இந்நிலையில், இவரிடம் பேட்டி எடுத்த நிருபருக்கும், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுகாதார அதிகாரிகள் காசர்கோடு ஆட்சியர் பாபுவை தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளனர். மேலும், அவரது கார் ஓட்டுனர் மற்றும் பாதுகாவலர் ஆகியோரையும் தனிமைப்படுத்தி கொள்ளும்படி கூறியுள்ளனர்.
இதனையடுத்து, நிருபருடன் பணிபுரிந்த புகைப்படக்காரர், வாகன ஓட்டுனர் மற்றும் 2 பணியாளர்கள் என 4 பேரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 495-ஆக உயர்ந்துள்ளது.