ஒடிசா ரயில் விபத்துக்கு கோரமண்டல் ரயில் ஓட்டுநர் காரணம் இல்லை!
சிக்னல் பிரச்னையால் கோரமண்டல் விரைவு ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது என தகவல்.
ஒடிசாவில் கோரமாண்டல் எக்ஸ்பிரஸ், ஹாவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 270க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதில் பலர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் விபத்து நடந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிக்னல் காரணமாக தான் விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் பஹானாகா ரயில் விபத்தில், கோரமண்டல் விரைவு ரயில் ஓட்டுநர் மீது எந்த தவறும் இல்லை என ரயில்வே செயல்பாடுகள் துறை அதிகாரி ஜெயா வர்மா சின்ஹா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கோரமண்டல் ரயிலுக்கு பச்சை சிக்னல் கிடைத்ததால் தான் ஓட்டுநர் ரயிலை இயக்கியதாகவும், அனுமதிக்கப்பட்ட வேகமான 130 கிமீ வேகத்தை விட 128 கிமீ வேகத்திலேயே ரயில் சென்றதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், பச்சை சிக்னல் கிடைத்ததால்தான் லூப் லைனிற்குள் கோரமண்டல் விரைவு ரயில் நுழைந்தது. நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னையால் தான் கோரமண்டல் விரைவு ரயில் மோதியது எனவும் கூறியுள்ளார்.