பதவியை காங்கிரசுக்கு கொடுக்க குமாரசாமி சம்மதம்..!
மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் தலைவர்களிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகத்தில் துணை முதலமைச்சர் பதவியையும், சபாநாயகர் பதவியையும் காங்கிரஸ் வசமாகிறது.
கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி நாளை பொறுப்பேற்கிறார். இதை முன்னிட்டு நேற்று டெல்லி சென்ற குமாரசாமி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியையும், அவரது தாயார் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் தலைமையுடனான இந்த சந்திப்பின்போது, கர்நாடகத்தில் அதிகாரப் பகிர்வு என்பதைத் தாண்டி, நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் இணைந்து பணியாற்றுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக, சந்திப்பின்போது உடனிருந்த கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய தலைவர் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஒருமுறை காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அமைந்து, அது பாதியிலேயே முறிந்தது போன்ற கடந்த கால கசப்புணர்களை மறந்து செயல்பட காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகத்தில் துணை முதலமைச்சர் பதவியையும், சபாநாயகர் பதவியையும் காங்கிரசுக்கு கொடுக்க குமாரசாமி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை குமாரசாமி பதவியேற்பு நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் சார்பில் துணை முதலமைச்சரும் பதவியேற்றுக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.