“ட்விட்டர் பறவையை சமைத்து, டெல்லிக்கு பார்சல்” – காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் மகன் வினோத எதிர்ப்பு..!வீடியோ உள்ளே..!

Default Image

ஆந்திராவில் “ட்விட்டர் டிஷ்” உணவை சமைத்து, ட்விட்டர் இந்தியாவின் தலைமையகத்திற்கு  காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி., ஜி.வி. ஹர்ஷ குமாரின் அவர்களின் மகனான ஜிவி ஸ்ரீ ராஜ் பார்சல் அனுப்பியுள்ளார்.

டெல்லியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தைப் பகிர்ந்த காரணத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களின்ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது.காரணம்,பெற்றோரின் படத்தைப் பகிர்ந்ததன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் ட்விட்டர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து,காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் கணக்குகள் முடக்கப்பட்டன.குறிப்பாக,காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் , “ட்விட்டர் கணக்கை முடக்கியதன் மூலம் ட்விட்டர் நிறுவனம் நமது அரசியல் செயல்பாட்டில் தலையிட்டுள்ளது. ஒரு நிறுவனம் நமது அரசியலை வரையறுக்க தனது வர்த்தகத்தைப் பயன்படுத்துகிறது. ஒரு அரசியல்வாதியாக நான் அதை விரும்பவில்லை. இது இந்திய ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதல். ட்விட்டர் நடுநிலையானது அல்ல அது ஒரு அரசு சார்புடையது என தெரிந்துள்ளது.ஏனெனில்,ஆட்சியில் உள்ள அரசு சொல்வதைத்தான் ட்விட்டர் நிறுவனம் கேட்கிறது” என மிகவும் கடுமையாக விமர்சித்தார்.

இதனையடுத்து,ஆகஸ்ட் 14 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களின் ட்விட்டர் கணக்குகளும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.இறந்த பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து படங்களைப் பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் தரப்பில் ஒப்புதல் கடிதத்தை சமர்ப்பித்த பிறகு கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,காங்கிரஸ் கட்சி மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களின் ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்கியதைக் கண்டித்து,ஆந்திராவில், ட்விட்டர் லோகோவில் இடம்பெற்ற பறவையை போன்ற ஒன்றை (ட்விட்டர் டிஷ்) எண்ணெயில் போட்டு சமைத்து,டெல்லியில் உள்ள ட்விட்டர் இந்தியாவின் தலைமையகத்திற்கு  காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி., ஜி.வி. ஹர்ஷ குமாரின் மகனுமான ஜிவி ராஜ் பார்சல் அனுப்பியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“இதை அனைவரும் பார்க்க வேண்டும். இது ட்விட்டர் பறவை.காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாங்கள் ட்விட்டர் பறவையை வறுக்கிறோம். ட்விட்டர் நிறுவனம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்கி எங்கள் ட்வீட்களை விளம்பரப்படுத்தாமல் தவறு செய்துவிட்டீர்கள். எனவே இதை வறுத்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்புகிறோம்”,என்று கூறினார். அப்போது அவரைச் சுற்றியுள்ள காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராகவும் காங்கிரஸைப் புகழ்ந்து கோஷங்கள் எழுப்பினர்.மேலும்,அவர்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை அடைந்து அங்குள்ள அதிகாரியிடம் சமைத்த உணவு பார்சலை ஒப்படைத்தனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்