வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரும் போராட்டம் ! அரசுடன் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,இன்று அரசுடன் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நேற்று 7-வது நாளாக டெல்லியில் பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு ,டிசம்பர் 3-ஆம் தேதிக்கு முன்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்தது.குறிப்பாக பேச்சுவார்த்தைக்கு முன்னர் விவசாய அமைப்புகள் அரசு கூறும் இடத்திற்கு போராட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்தது அரசு.இதன்படி மாற்றிக்கொண்டால் பின்னர் விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்த நிலையில் அதனை புறக்கணிப்பதாக சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் அறிவித்தது.
ஆகவே நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்தது.அதாவது நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்தது. அதன்படி 30 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் விக்யான் பவனில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.மத்திய அரசு சார்பில்,மத்திய வேளாண்த் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ,மத்திய ரயில்வே மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
அதில், விவசாயிகள் கோரிக்கையை பரிசீலனை செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் குழு அமைத்து தங்கள் கோரிக்கையை விசாரிக்கும் அந்த விஷயத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.கூட்டம் குறித்து பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் , கூட்டம் நன்றாக இருந்தது, மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை டிசம்பர் 3 ஆம் தேதி (இன்று )நடைபெறும் என்று முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.அதன்படி இன்று பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.இன்று நடைபெறும் 2-ஆம் கட்டபேச்சுவார்த்தை ,மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.