பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நாளை தண்டனை அறிவிப்பு
பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாளை தண்டனையை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்.
சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே இருசக்கர சொகுசு வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில், நீதிபதி ஹெல்மெட் அணியாதது குறித்தும், முக கவசம் அணியாதது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனையடுத்து, பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் கூறி அவருக்கு எந்த மாதிரியான தண்டனை என்பது குறித்து தீர்ப்பை கடந்த 20-ம் தேதி வழங்குவதாக இருந்தது.அதன்படி அன்று நீதிபதிகள், பிரசாந்த் பூஷணுக்கு எந்த மாதிரியான தண்டனை வழங்கினாலும், அது பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணைக்குப் பிறகே தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்தனர்.
மேலும், அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷணுக்கு 2 நாள் அவகாசம் அளித்தது.ஆனால் அவகாசம் முடிந்த நிலையில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.இதனையடுத்து பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாளை தண்டனையை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம். வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படுகிறது.