மகாராஷ்டிராவில் நீண்ட இழுபறிக்கு பிறகு முடிவுக்கு வந்தது தொகுதி பங்கீடு!
Maharashtra: மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதியானது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், 48 மக்களவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வரும் 19-ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா அரசியல் களத்தை பொறுத்தவரை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக, சுனில் தாட்கரே தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களத்தில் உள்ளது.
அதேசமயம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவு, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பிரிவு மற்றும் காங்கிரஸ் ஆகிய இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு முடிவாகாமல் இருந்து வந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் இழுபறி நீடித்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு நீண்ட இழுபறிக்கு பிறகு முடிவுக்கு வந்தது. அதாவது இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா பிரிவு 21 இடங்களில் போட்டியிடுகிறது.
இதுபோன்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பிரிவு 10 தொகுதிகளிலும், அகில இந்திய காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரத்பவார், உத்தவ் தாக்ரே மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் நானா படேல் ஆகிய 3 பேரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.