காங்கிரஸ் சாம்பலாக்க நினைத்த நிலக்கரியை பாஜக வைரமாக மாற்றியுள்ளது.! – நிர்மலா சீதாராமன்.!
கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு அடுத்தடுத்த நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம், வழக்கமான கேள்வி நேரம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
ஆளும் பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் எட்டாவது நாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.
ஒரே நாளில் 3 பேருக்கு பாரத ரத்னா விருது – பிரதமர் மோடி அறிவிப்பு
அந்த வெள்ளை அறிக்கையில், 2004 முதல் 2014 வரையில் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் எப்படி இருந்தது.? தற்போதைய இந்திய பொருளாதாரம் எப்படி உள்ளது என்பதை ஒப்பிட்டு புள்ளி விவரங்களை பகிர்ந்து இருந்தார்.
அதன் மீதான விவாதம் இன்று நடைபெற்ற போது, மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் பலவீனமாக இருந்த பொருளாதாரத்தை கடும் சவால்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீட்டுள்ளது.
உலக அளவில் பொருளாதார நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோது அதனை சமாளித்து தற்போது உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா மாறி உள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியில் பொருளாதாரக் கொள்கையில் வெளிப்படத்தன்மை இல்லை. காமன்வெல்த் போட்டிகளை நடத்தியதில் கூட பெரும் ஊழல் நடந்துள்ளது.
நிலக்கரி சுரங்கத்தை சாம்பலாக்க காங்கிரஸ் ஆட்சி நினைத்தது. ஆனால் அதனை தற்போதைய பாஜக அரசு வைரமாக மாற்றி உள்ளது. குட்கா நிறுவனத்திற்கு கூட நிலக்கரி சுரங்கம் தோண்டும் உரிமம் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது என்று பல்வேறு ஊழல்கள் பற்றிய குற்றச்சாட்டை நிர்மலா சீதாராமன் கூறுகையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
மேலும், அவர் கூறுகையில் பாஜக நாட்டை முதன்மையானதாக கருதுகிறது. ஆனால், காங்கிரஸ் தங்களது குடும்பத்தை தான் முதன்மையானதாக கருதுகிறது என்றும் குற்றம் சாட்டினார். இந்த அவையில் எனது உரையை கேட்டு அதற்கு சரியான பதில் கூற எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு தயாரா என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இதனால் மக்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.