மீண்டும் கூட்டணி சேரும் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம்..!
கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியமைத்து உள்ளது. அமைச்சரவை விவகாரம் தொடர்பாக பூசல்கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியது. இதற்கிடையே இந்த கூட்டணி ஆட்சி கடைசி வரையில் நிலைக்குமா? என்றெல்லாம் கேள்வி எழுப்படுகிறது.
பாரதீய ஜனதாவை எதிர்க்கொள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே வரிசையில் நிற்க வேண்டும் என்ற கோஷமானது அனைத்து எதிர்க்கட்சிகள் தரப்பிலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
உ.பி. இடைத்தேர்தலில் பா.ஜனதாவிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்ததால் பா.ஜனதா தோல்வியை தழுவியது. இதனையடுத்து பிராந்திய கட்சிகள், காங்கிரஸ் ஒரே அணியாக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையானது முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2019 பாராளுமன்றத் தேர்தலை மதசார்பற்ற ஜனதா தளத்துடன் எதிர்க்கொள்வோம் என காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேசி வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் அமைச்சரவை ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் (காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம்) முடிவுக்கு வந்து உள்ளோம்.
மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு நிதித்துறை வழங்கப்பட்டு உள்ளது. எல்லா விவகாரமும் முடிக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியாக 2019 பாராளுமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ளும் என கூறினார்.